தினம் ஒரு திருப்பாவை

தினம் ஒரு திருப்பாவை

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்,

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்,

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்,

நாரா யணனே நமக்கே பறைதருவான்,

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:

செல்வ செழிப்பைக் கொண்ட இந்த ஆயர் குலத்தில் பிறந்த சகல

ஐஸ்வரியங்களையும் கொண்ட பெண்களே! இந்த அழகிய மார்கழி மாதத்தில்

நாம் விரதம் மேற்கொள்வோம். நன்னாளில் நாம் நீராடுவோம். தோழிகளே!

ஒருத்தி மகனாகப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாக கோகுலத்துக்கு

சென்று சேர்ந்த கிருஷ்ணனை, யசோதையின் பிள்ளை என்று சாதாரணமாக

நினைத்துவிடாதீர்கள். கருத்த மேகத்தின் நிறம் போன்ற மேனியை

உடையவனும், காய்கின்ற கதிரையும் குளிர்விக்கின்ற சந்திரனையும் இரண்டு

கண்களாக உடையவனுமாகிய கிருஷ்ணன், சாட்சாத் அந்த வைகுண்டத்தில்

இருக்கும் நாராயணனே. அந்த கிருஷ்ணனே நமக்கு வேண்டிய யாவும்

அருளக்கூடியவன். அவனுடைய புகழை உலகத்தவர் அறியும்படியாகப் பாடி

வழிபடுவோம்” என்கிறாள்.

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலை வழியே

நின்று பால் சோர நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி சினத்தினால் தென்னிலங்கைக்

கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்து இல்லத்தாரும்

அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்.

பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள்

மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன.

அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த

அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான

ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ,

உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம்.

சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை

அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின்

பெருமையைப் பாடுகிறோம்.

நீயோ, இன்னும் பேசாமல் உறங்கிக்கொண்டிருக்கின்றாய். ஆயர்பாடியில்

அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம் என்று

கேட்கின்றனர். கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின்

குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய அதிகாலையில்

எழுந்து இறைவனின் புகழைப் பாடுகின்றனர். எவ்வளவு சிரமப் பட்டேனும்

ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது

இப்பாடல் உணர்த்தும் கருத்து.

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந் தீர்த்தன்நற் றில்லைச்சிற்

றம்பலத்தே தீயாடும் கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும்

படைத்தம் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப

வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீ

ராடேலோ ரெம்பாவாய்.