ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஆதியான அஞ்சிலும் அனா தியான நாலிலும்
சோதி யான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும்
நீதி யான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே
சக்தி நீ தயவு நீ தயங்கு சங்கினோசை நீ
சித்தி நீ சிவனும் நீ சிவாய மாமெழுத்து நீ
முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ
அத்திபுர மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே
ஆறு நாடு தேடினும் ஆனை சேனைதேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ
ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய் த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே
கண்ணிலே இருப்பவனே கருங்க டல் கடந்துமால்
விண்ணில் இருப்பவனே மேவி யங்கு நிற்பனே
தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே
அண்டமேழு முழலவே யனிந்தயோனி யுழலவே
பண்டு மாலயனுடன் பரந்து நின்றுழலவே
எண்டிசை கடந்து நின்றிருண்ட சக்தியுழலவே
அண்டரண்ட மொன்றதாய் ஆதி நடமாடுமே
அகார காரணத்திலே யனேகனேக ரூபமாய்
உகார காரணத்திலே யுருத்தரித்து நின்றனன்
மகார காரணத்திலே மயங்குநின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே
பூவும் நீரும் என்மனம் பொருது கோயில் என்னுளம்
ஆவியோடு லிங்கமா யகண்ட மெங்குமாகிலும்
மேவு கின்ற ஐவரும் விளங்கு தீப தீப மாய்
ஆடு கின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தியில்லையே
ஒன்று மொன்று மொன்றுமே யுலகனைத்து மொன்றுமே
அன்று மின்று மொன்றுமே அனாதியான தொன்றுமே
கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்
அன்று தெய்வ மும்முள அறிந்ததே சிவாயமே
ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாற தெங்கனே
செய்ய திங்களங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே
ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோவில்கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய் திறப்பதில்லையே
ஆதியுண்டு அந்தமில்லை யன்று நாலு வேதமில்லை
ஜோதியுண்டு சொல்லுமில்லை சொல்லிறந்ததேதுமில்லை
ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதியன்று தன்னையும் யாரறிவாரண்ணலே
மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்
மூன்று மஞ்செழுத்துமாய் முழங்கு மவ்வெழுத்துளே
ஈன்ற தாயும் அப்பரும் இயங்குகின்ற நாதமும்
தோன்று மண்டலத்திலே சொல்ல வெங்குதில்லையே
கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானமற்ற நெஞ்சகத்தில் வல்லதேது மில்லையே
ஊனமுற்ற ஜோதியோடு உணர்வு சேர்த்தடக்கினால்
தேனதத்தினூரல் போல் தெளிந்ததே சிவாயமே
தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலு மீசனும் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவாய் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் நாமறிந்த நாமமே
தாய் தந்தை குருவும் நீ சகல தேவகணங்கள் நீ
சிந்தை நீ தெளிவும் நீ சித்தி முக்தி தானும் நீ
விந்தும் நீ வினையும் நீ மேலதாய வேதம் நீ
எந்தை நீ இறைவன் நீ என்னையாண்ட ஈசன் நீ
சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சக்தியற்று சம்புவற்று ஜாதி பேதமற்றுநன்
முக்தியற்று மூலமற்று மூல மந்திரங்களும்
வித்தை யித்தை யீன்றவிதத்தில் விளைந்ததே சிவாயமே
நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நின்றதொன்றுதான்
நல்லதென்ற போது நல்லதாகி நின்றபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகுமாதலால்
நல்லதொன்று நாடிநின்று நாமஞ் சொல்லவேண்டுமே
பார்த்து நின்ற தம்பலம் பரமனாடுந் தம்பலம்
கூத்து நின்ற தம்பலம் கோரமான தம்பலம்
வார்த்தையான தம்பலம் வன்னியான தம்பலம்
சீற்றமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே
விண்ணினின்று மின்னெழுந்து மின்னோடுங்குவாறு போல்
எண்ணுள் நின்று எண்ணுமீசன் என்னகத்திருக்கையால்
கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால்
எண்ணுள்நின்ற என்னையும் நானறிந்ததில்லையே
உருக்கலந்த பின்னலோ வுன்னை நானறிந்ததும்
இருக்கிலென் மறக்கிலென் இணைந்திருந்தபோதெல்லாம்
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே
சிவாய வென்ற வக்ஷரம் சிவனிருக்கு மக்ஷரம்
உபாய மென்று நம்புதற்கு உண்மையான வக்ஷரம்
கபாடமற்ற வாசலைக்கடந்து போன வாயுவை
உபாய மிட்டழைத்துமே சிவாய வஞ்செழுத்துமே
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து தேவராகலாம்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து வானமாவலாம்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொண்டவான் பொருள்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளுமுண்மையே…