ஸ்ரீ சண்முக கவசம் பாடல் வரிகள் 

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்

தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி

எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன

திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க. — (1)

ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க

தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க

சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க

நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க. — (2)

இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை

முருகவேள் காக்க, நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க

துரிசஅறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க

திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க. — (3)

ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க

தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க

ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்

ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க. — (4)

உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க

தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க

புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்

பிறங்கு மால்மருகன்காக்க, பின்முதுகைச் சேய் காக்க. — (5)

ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்த்தியோன் காக்க, வம்புத்

தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய

நாணினை அங்கி கெளரிநந்தனன் காக்க, பீஜ

ஆணியை கந்தன்காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க. — (6)

எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க

அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க

விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க

செஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க. — (7)

ஏரகத் தேவன்என்தாள் இரு முழங்காலும் காக்க

சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க

நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க

சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க. — (8)

ஐயுறு மலையன்பாதத்து அமர் பத்து விரலும் காக்க

பையுறு பழநி நாத பரன், அகம் காலைக் காக்க

மெய்யுடன் முழுதும், ஆதி விமல சண்முகவன் காக்க

தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க. — (9)

ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்

பலிகொள் இராக்கதப்பேய் பலகணத்து எவை ஆனாலும்

கிலிகொள எனைவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம்

வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க. — (10)

ஓங்கிய சீற்றமே கொண்டு உவணிவில் வேல் சூலங்கள்

தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி

பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்,

தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க. — (11)

ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்

தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்

தவ்வியே வருவா ராயின், சராசரம் எலாம் புரக்கும்

கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க. — (12)

கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை

கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு

நடையுடை எதனா லேனும் நான் இடர்ப் பட்டி டாமல்

சடுதியில் வடிவேல் காக்க சானவிமுளை வேல் காக்க. — (13)

ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்

சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி

நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி

உகமிசை இவையால், எற் குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க. — (14)

சலத்தில் உய்வன்மீன் ஐறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்

நிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உள்ள

குலத்தினால், நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை

பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க. — (15)

ஞமலியம் பரியன்கைவேல், நவக்கிரகக்கோள் காக்க

சுமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,

திமிர்கழல் வாதம், சோகை, சிரமடி கர்ண ரோகம்

எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க. — (16)

டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்ட மாலை

குமுறு விப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை காசம்,

நிமிரொணா(து) இருத்தும்வெட்டை, நீர்பிரமேகம் எல்லாம்

எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க. — (17)

இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்

முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை, தீமந்தம்

சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த

பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க. — (18)

தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்

சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்,

அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை

எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க. — (19)

நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்

அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்

இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்பகந்த ராதி

இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க. — (20)

பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்

கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி

எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை

ஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க. — (21)

மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்

தண்ணிறை ஜலத்தின் மீதும்சாரி செய் ஊர்தி மீதும்

விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை

நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க. — (22)

யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க

அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க

சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க

சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க. — (23)

ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்

செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி

விஞ்சிடு திசையில் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில்

எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க. — (24)

லகரமே போல் காளிங்கன்நல்லுடல் நெளிய நின்று

தகர மர்த்தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்,

நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில்

இகல் அயில்காக்க, வாயுவினில் குகன் கதிர்வேல் காக்க. — (25)

வடதிசை தன்னில் ஈசன்மகன்அருள் திருவேல் காக்க

விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க

நடக்கையில் இருக்கும்ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில், கீழ்க்

கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க. — (26)

இழந்துபோகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்,

வழங்கும் நல் ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும்

பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்

செழும்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க. — (27)

இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்

வளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க

ஒளிஎழு காலை, முன்எல் ஓம் சிவ சாமி காக்க

தெளிநடு பிற்பகல் கால், சிவகுரு நாதன் காக்க. — (28)

இறகுடைக்கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க

திறலுடைச் சூர்ப்பகைத்தே, திகழ்பின் இராவில் காக்க

நறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க

மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க. — (29)

இனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க

தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க

நனி அநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்

கனிவோடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்கவந்தே. — (30)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன